எப்போதும் வெய்யிலில் வெந்துகொண்டிருக்கும் வேலூர் கோட்டையை, இப்போது மார்கழிக் குளிர் நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. குளிராளும் வேலூர் கோட்டைக்குள் மீண்டும் நுழைந்த நமது மகளிரணி கச்சேரியைத் தொடங்கியது.
நாச்சியாள்: இங்கே தலைவிரித்தாடும் கள்ள லாட்டரியை, கள்ள மதுவை, மணல் கொள்ளையை மட்டுப்படுத்துறதுக்கு ஒரு நேர்மையான அதிகாரி நம்மூருக்கு வரமாட்டாகளானு அறந்தாங்கி மக்கள் ஏங்கிக்கினு இருந்தாங்க. ஏங்கின மக்கள் சந்தோஷப்படுற மாதிரி அறந்தாங்கிக்கு டி.எஸ்.பி.யா வந்தாக கோகிலா.
மல்லிகை: கட்டுப்படுத்துனாங்களே...
நாச்சியார்: அறந்தாங்கி, துரையரசபுரம் பகுதி பார்கள்ல ரெய்டு அடிச்சு கள்ள மதுவைப் புடிச்சாங்க. ஆனா அடுத்த அரைமணி நேரத்துல மேலிடங்கள்ல இருந்து போன் மேல போன்.
மெரீனா: தப்பு செய்றவங்க அரசியல் சப்போர்ட் உள்ளவங்கதான். மேலயிருந்து போன்மேல போன் வரத்தான் செய்யும். அதுக்கெல்லாம் பணிஞ்சா நேர்மையா இருக்க முடியுமா?
நாச்சியார்: இதைக் கேளுங்க, தெற்கு வெள்ளாற்று மணலைச் சுரண்டி எடுத்து ஆத்தையே சீமை விஷக்கருவைக் காடாக்கினது யாருனு கேட்டால், அதுக கண்ணை மூடிக்கினு கே.எஸ்.ரமேஷ்னு சொல்லும் நாயக்கர்பட்டியில் வெள்ளாத்துல மணல் அள்ளிகினு இருந்த ரமேஷோட பொக்லைன்களையும் டிப்பர் லாரிகளையும் டி.எஸ்.பி. கோகிலாவே நேர்ல போய் புடுச்சு, காவல்நிலையத்துக்குக் கொண்டு வந்தாரு.
மல்லிகை: உடனே சிபாரிசு போன்கள் வந்திருச்சோ?
நாச்சியார்: ஆமா! ரமேஷை யாருனு நெனைச்சீங்க? உடனே லாரிகளையும் பொக்லைனையும் விடுங்கனு போன் மேல போன். ஆனாலும் கேஸ் போட்டுப்பிட்டாக. இப்ப... கோகிலாவை உடனே அறந்தாங்கியை விட்டுத் தூக்கணும்னு ஆளும்கட்சிப் புள்ளிகள் கங்கணம் கட்டிக்கினு நிக்கிறாகளாம்.
பரணி: நேர்மையான, எளிமையான அதிகாரிகளை வேலை செய்யவே விடமாட்டாங்களோ? எங்க நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா ஒரு அருமையான வேலை செஞ்சிருக்காவ.
நாச்சியார்: என்ன வேலை?
பரணி: அவுங்க பாப்பா கீதாஞ்சலிக்கு மூணு வயசாச்சு. மற்ற அதிகாரிகளுக்கு முன்னுதாரணமா இருக்கணும்னு நெனைச்சாங்களா இல்லை, ஏழைக்குழந்தைகளோடு தன் குழந்தை வளரட்டும்னு நெனைச்சாவளா தெரியலை. பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்துல சேர்த்திருக்காங்க.
மெரீனா: இளம் ஆட்சியர். சுறுசுறுப்பானவங்க, மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ளவர்னு ஏற்கனவே நல்ல பெயர் எடுத்திருந்தாங்க. இதுவும் சேர்ந்திருச்சு. நெல்லைக்கு நல்ல கலெக்டர் கிடைச்சாச்சுங்கிற பெருமைதான்.
பகவதி: இப்படிப்பட்ட நல்ல பெயரை சம்பாதிச்சிருக்காங்க, கேரள மாநிலத்தின் முதல் பெண் டி.ஜி.பி.யான ஸ்ரீலேகா.
பவானி: சிறைத்துறை டி.ஜி.பி.னு கேள்விப்பட்டேன். வனிதாங்கிற மலையாள இதழ்ல ஒரு தொடர் எழுதுறாங்க இல்லையா?
பகவதி: அவங்களேதான். செய்த குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையில் உள்ள பெண் கைதிகளைப் பற்றியதுதான் அந்தத் தொடர். எத்தகைய சூழ்நிலைகளில் அவங்க குற்றவாளியானார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களின் மறுபக்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்.
நாச்சியார்: கைதிகளின் மறுபக்கத்தை எழுத ஆரம்பித்தால், காவல்துறையையும் விமர்சனம் செய்ய வேண்டியிருக்குமே?
பகவதி: டி.ஜி.பி.யே இப்படி நம்ம துறையைப் பற்றி எழுதலாமானு காவல்துறையிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பிக்கிட்டிருக்கு. ஆனால் கைதிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் டி.ஜி.பி. ஸ்ரீலேகாவுக்கு பாராட்டுகள் அதிகரிக்குது. சுருக்கமா சொல்லணும்னா இப்ப கேரளப் பெண்களின் ஹீரோயின் டி.ஜி.பி. ஸ்ரீலேகாதான்.
காமாட்சி: ஹீரோயின்னு சொன்னதும்தான் நினைவுக்கு வருது. புதுசா ஒரு நகைக்கடைத் திறப்புவிழாவுக்கு ஹீரோயின் தமன்னா வேலூருக்கு வந்தாங்க. தமன்னா வந்தா ரசிகர்கள் வராமலா இருப்பாங்க?
மல்லிகை: நான்தான் நியூஸ்ல பார்த்தேனே... வேலூர் அண்ணாசாலையே தமன்னாவால திணறிப்போச்சே!
காமாட்சி: அதேதான். பாதுகாப்புப் பணிக்கு வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருந்து ஆய்வாளர் மைதிலி தலைமையில் போலீசார் வந்திருந்தாங்க.
மெரீனா: பிரச்சினையாயிருச்சோ?
காமாட்சி: சேச்சே...! பிரச்சினை ஏதும் ஏற்படக்கூடாதுனுதானே போலீஸ் வந்தது. நடிகை தமன்னா கடையைத் திறந்து வைத்துவிட்டு திரும்ப நினைத்தபோது, அவரை நெருங்கிய இன்ஸ்பெக்டர் மைதிலி, ""நாங்க சொல்றதைவிட உங்க மாதிரி கலைஞர்கள் சென்னா... பொதுமக்கள், குறிப்பா இளைஞர்கள் மனசில் பதியும். அதனால சாலை போக்குவரத்து பற்றி கொஞ்சம் பேசுங்களேன்''னு கேட்டுக்கொண்டார்.
பரணி: நடிகை பேசினாங்களா?
காமாட்சி: டூவீலர் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் போடுங்க. கார் ஓட்டும்போது சீட் பெல்ட்டை மாட்டிக்கொள்ளுங்கள். செல்போன்ல பேசிக்கொண்டே டிரைவ்பண்ணாதீங்க. சிக்னல்களை மீறாதீங்கனு நாலுவார்த்தைச் சொன்னாலும் நச்சுனு சொல்லிட்டுப் போனாங்க தமன்னா.
பகவதி: தான் சொன்னதை தமன்னா தவறாமல் சொல்லிட்டாங்கனு இன்ஸ். மைதிலி ரொம்ப ஹேப்பியாகியிருப்பாங்களே?
காமாட்சி: இன்ஸ். மைதிலி மட்டுமில்லை, அங்கே கூடியிருந்த கூட்டமே ஹேப்பியாயிடுச்சு.
-செம்பருத்தி, து.ராஜா, மணிகண்டன்